×

மர்ம நபர்கள் வைக்கும் தீயால் அடிக்கடி விபரீதம் ஏலகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ

* அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் கருகியது
* வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் மர்மநபர்கள் அடிக்கடி வைக்கும் தீயால் காட்டுத்தீ பரவி அரியவகை மரங்கள், மூலிகை செடி கொடிகள் காட்டில் வசிக்கும் உயிரினங்கள் எரிந்து நாசமானது.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் இந்த மலையில் அதிகளவில் மரங்கள் இருப்பதாலும் மலையின் உயரம் அதிகமாக இருப்பதாலும் எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் தங்கி கண்டுகளித்து செல்கின்றனர். மேலும், இந்த மலையில் அரியவகை மரங்கள், மூலிகை செடி கொடிகள் உள்ளது. மான், கரடி, மயில், முயல், குரங்கு, மலைப்பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் மலையடிவாரம் உள்ள பகுதிகளுக்கு சென்று சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு, புகை பிடித்து தீயை போட்டு விடுவதால் சருகுகள் மூலம் பெரிய அளவிலான தீப்பற்றி மளமளவென பரவி காட்டுத்தீயாக மாறி காட்டுப்பகுதிக்குள் எரிந்து நாசமாகிறது.கடந்த மாதத்தில் மட்டும் ஏலகிரி மலை 3 முறை மர்ம நபர்கள் வைத்த தீயால் மரங்கள் செடி, கொடிகள் காட்டில் வசிக்கும் உயிரினங்கள் தீயில் கருகி நாசமானது.

இந்நிலையில் நேற்று மாலை ஜோலார்பேட்டை அருகே மலையடிவாரத்தில் ஊசி நாட்டான் வட்டம், ஐயப்பன் வட்டம், சுரங்கள் வட்டம் ஆகிய பகுதிகளில் மர்ம நபர்கள் காட்டுக்கு தீ வைத்து சென்றுள்ளனர். இதனால் மூன்று பகுதிகளில் காட்டுத் தீ மளமளவென பரவி மலையின் உச்சி பகுதிக்கு சென்றது. இதனால் அங்கு உள்ள ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகம் சார்பில் நடப்பட்டிருந்த 300 வேப்பங்கன்று, 300 புங்கன் கன்று ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமானது தெரிவிக்கின்றனர்.

மேலும் காட்டுப் பகுதியில் இருந்த அரிய வகை மரங்கள், மூலிகை செடி, கொடிகள், காட்டில் வசிக்கும் உயிரினங்கள் போன்றவை எரிந்து நாசமானதாக தெரிகிறது. எனவே இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபடும் மர்மநபர்களை வனத்துறையினர் கண்காணித்து அவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Yelagiri mountains , Jolarpettai: Rare trees and herbaceous vines inhabit the forest as wildfires spread by the frequent fires set by mysterious people in the Yelagiri hills.
× RELATED இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக...